தமிழ்நாடு பொதுப்பணித்துறையில் சிறப்பு தலைமைப் பொறியாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற பொறி. அ. வீரப்பன் அவர்கள் பன்னெடுங்காலம் தமிழகக் கட்டுமானத்துறையில் முக்கிய பங்காற்றியவராவார். ஓய்விற்குப் பின்னும் பல்வேறு நிறுவனங்களுக்கும். புராஜெக்டுகளுக்கும் செயல் ஆலோசகராக பரிமளித்து வரும் பொறியாளர் ஆவார். பெரும்பாலும் பொறியாளர்கள், கட்டிடவியல் நிபுணர்கள் தங்கள் துறையில் மிகவும் சிறந்த அறிவுசார் புலமையைப் பெற்றிருந்தாலும் கூட, தான் கற்றதை பிறருக்கு சொல்வதிலோ, எளிய தமிழில் எழுதுவதிலோ நிபுணத்துவம் பெறாதவர்களாகவே இருப்பர். ஆனால், பொறி. அ. வீரப்பன் அவர்கள் அடிப்படையில் எழுத்தாளுமையில் வல்லவர். எத்தனை சிரமமான தொழிற்நுட்ப விஷயங்களையும், ஆங்கில கலப்பின்றி தமிழில் சொல்லக்கூடிய திறன் அவருக்கு உண்டு. கட்டுமானவியல் குறித்து அனுதினமும் ஆய்வு செய்வதும், ஒப்பீடுகள் செய்வதும், கருத்துரைகளைத் தயாரிப்பதும், அஸ்திவாரம் மற்றும் கட்டிட வடிவமைப்புக் கோளாறுகள் எங்கு நடந்தாலும், அங்கு அனுபவங்களைப் பல்வேறு கட்டுமான மாத இதழ்களில் வெளியிடுவதும், அதற்கென எந்த பிரதிபலனையும் கோராமல் இருப்பதும், பொறி. அ. வீரப்பன் அவர்களுக்கு மட்டுமே இருக்கக்கூடிய இயல்பு. அவரது அனுபவங்களையும், ஆய்வுக் கோர்வைகளையும். கருத்துரைகளையும் தொகுத்து கட்டுமானப் பொறியியல் தெரிந்ததும் தெரியாததும் என இரு பாகங்களாக வெளியிட்டிருக்கிறோம். பொறி.அ. வீரப்பன் அவர்களின் இந்த எழுத்துச் சேவை உறுதிபெற்ற கட்டுமானங்கள் போல நீண்ட காலம் நிலைத்து நிற்கும்.