புவி வெப்பமயமாதல், வடதுருவம் சூடாகுதல், ஓசோன் ஓட்டை அகலமாகுதல் என சென்ற 10 ஆண்டுகளில் சுற்றுப்புற சூழல் குறித்த விழிப்புணர்வு நம்மிடையே பரவலாக அதிகரித்து வருகிறது. உலகிலேயே தொழிற்சாலைகள் மற்றும் போக்குவரத்துக்கு அடுத்தபடியாக கட்டுமானத்துறைதான் சுற்றுப்புற சூழலை சீர்குலைக்கும் துறையாக மாறி வருவது கவலைக்குரியது. ஒவ்வொரு கட்டுமானமும் மேற்கொள்ளப்படும் பொழுது, தெரிந்தோ தெரியாமலோ இயற்கையின் சில சிறப்பம்சங்கள் சிதைக்கப்பெற்றுதான் உருவாகின்றன.கட்டுமானத்தின்போது மட்டுமல்லாமல், ஒரு கட்டிடம் பயன்பாட்டிற்கு வந்தபிறகு அதனால் ஏற்படும் சுற்றுப்புற சீர்கேடுகள் ஏராளம். கட்டப்படும் அனைத்து கட்டுமானங்களும், பசுமைக் கட்டிடமாக கட்டப்பட்டால் இதை பெரிதும் தவிர்க்கலாம். காலத்தின் தேவையறிந்து “பசுமைக் கட்டிடம் அமைப்பது எப்படி?” என்கிற நூலைப் படைத்து கட்டுமானத்துறைக்கு மட்டுமன்றி ஒட்டுமொத்த சமுதாயத்திற்குமே நற்பணி செய்திருக்கிறார் . பசுமைக் கட்டிடத்தின் இலக்கணம், பசுமைக் கட்டிட வடிவமைப்பு, பசுமையைக் காக்கும் மாற்றுப் பொருட்கள், சூரிய ஒளி காற்றாலை மூலம் மின்சாரம் பெறுதல், மழைநீர் சேமித்தல், மாடித்தோட்டம் அமைத்தல் என பல்வேறு பசுமைக் காரணிகளை மிகவும் எளிமையாக அழகு தமிழில் எடுத்துரைக்கப்பட்டுள்ளன. பொறியாளர்கள், கட்டுநர்கள் மட்டுமன்றி சின்னஞ்சிறு வீடு கட்டி குடி புகநினைக்கும் பொதுமக்கள் யாவருக்குமே இந்த நூல் ஒரு பசுமைக் கட்டிடத்திற்கான வழிகாட்டியாக திகழும்.