தென்னிந்தியா முழுவதும் பரவியிருந்த நமது முன்னோர்கள் காலத்திற்கும் சூழ்நிலைகளுக்கும் ஏற்ப வாழ்கிற வித்தையைக் கற்றிருந்தார்கள். பல்வேறு இன்னல்களில் பட்டுத் தெளிந்து, கற்றப் பாடங்களை, உணவு முறைகளை ஏட்டில் அல்லாமல் வாய்மொழியாகவும், பழமொழியாகவும், நூலாகவும் அடுத்தடுத்த சந்ததியினருக்கு வழிவழியாகச் சொல்லித் தந்தார்கள். ஆனால் நமது சந்ததியோ அயல்நாட்டுக்காரனைப் போல் வாழ வேண்டும் என்கிற போதையில், பகட்டில் சிக்கி உணவை விrமாக்கி உண்ணுகிறது. சிறுதானியம், கீரைகள், கிழங்குகள் போன்றவற்றை எப்போதோ துறந்து விட்டோம். பர்கர், பீட்ஸா, மைதா, சர்க்கரை. பதப்படுத்தப்பட்ட இறைச்சி என நோய்களைத் தரவல்ல உணவுப் பொருட்களைத் தேடிப்பிடித்து வாங்குகிறோம். எது நம் உடலுக்கான உணவு? என்பதை மறந்து, எது நாகரீகமாக உணவு என்பதில் தான் கவனம் செலுத்துகிறோம். அதனால் தான் கம்பு, திணை, ராகி நமது சமையலறை களிலிருந்து காணாமல் போயின. மேகி, ரெடிமேட் இட்லி மாவு வகையறாக்கள் உள்ளே புகுந்தன. இந்த நூல் நீங்கள் எதைச் சாப்பிட வேண்டும்? என்பதைச் சொல்கிற வழக்கமான நூல் அல்ல. எதை, எப்போது, எப்படி, எதனுடன் சேர்த்து, யாரெல்லாம் சாப்பிடக்கூடாது ? என்பதை விரிவாகச் சொல்லும் நூலாகும். நாம் மாறவேண்டிய தருணம் இது. மாறுவோம்.