மனிதர்களில் யார் எத்தகைய தன்மையை உடையவராக இருந்தாலும் கூட கதைகளை விரும்பாதவர்கள் யாரும் இல்லை. கதைகள் கேட்பதும் சுகம், சொல்வதும் சுகம், எழுதுவதும் சுகம் தான். அதிலும் தமிழ்நாட்டில் கதைகளுக்குப் பஞ்சமில்லை. தொலைத்தொடர்பு ஊடகங்கள் எத்தகைய பரிணாமங்களை தொட்டாலும் கதைகளின் வடிவங்கள் நம்மை விட்டுப் போவதில்லை. கதைகள் என்பது தத்துவத்தையோ, நீதியையோ வாழ்வின் எதார்த்த நிலையையோ, சமூகத்தின் மதிப்பீட்டையோ, மானுடவியல் முரண்களையோ அறிவின் முதிர்ச்சியையோ, வாழ்வின் உள்ளர்த்தத்தையோ கற்பிக்கக் கூடியதாக இருப்பின் அது நெடுநாள் நம் நெஞ்சைவிட்டு நீங்காமல் இருக்கும்.இந்த தொகுப்பில் உள்ள கதைகள் அப்படிப்பட்டவை தான். இக்கதைகள் அறிவார்ந்த நீதியைப் பற்றியும் பேசுகின்றன. மனிதனின் அசட்டுத் தனத்தைப் பற்றியும் நறுக்கென குட்டுகின்றன.இதிலுள்ள பல கதைகள் நம்மைத் திகைக்க வைக்கின்றன. சில சிரிக்க வைக்கின்றன. சில கதைகள் மனதை நெகிழ வைக்கின்றன. சில கதைகள் நம்மை பண்படுத்துகின்றன.நம்முடைய பேராசையை சுட்டிக்காட்டி உழைப்பின் மேன்மையைப் புரிய வைக்கின்றன. மனிதர்களுக்குத் தேவையான மாண்புகளை வரையறுக்கின்றன. நாவடக்கத்தையும், தன்னம்பிக்கையும் கற்பிக்கின்றன. ராஜா காலத்தில் பயணித்து புராணக் கதைகளுக்கும் புரவி ஏறிப் பேசுகின்றன.டக்கென நவீனக் கதைகளுக்கும் தாவுகின்றன. ஓரிருப் பக்கங்களுக்கு மிகாத 60 சின்னஞ்சிறுக் கதைகள் கொண்ட இந்த புத்தகம் பள்ளிமாணவர்கள், மேடைப் பேச்சாளர்கள் என்றில்லாமல் பொழுதை அறிவார்ந்து கழிக்க விரும்புவோர்கள் அனைவரும் படிக்க ஏற்றதாகும். படியுங்கள், பயனடையுங்கள், பிறருக்கும் அன்பொழுகச் சொல்லுங்கள்.