இன்டிரியர் அலங்காரம் என்றாலே செலவு வைக்கும் விஷயம் என்பது நடுத்தர மக்களின் அழுத்தமான எண்ணம். வீட்டின் கட்டுமானத்திற்கு தாராளமாகச் செலவு செய்யும் பலபேர் இன்டிரியர் என்றாலே தயங்குவார்கள். இன்டிரியர் அலங்காரம் என்பது ஆடம்பரம் சார்ந்தது என்பது அவர்கள் கூற்று. ஆனால், உண்மையில் இன்டிரியர் அலங்காரம் என்பது அழகியல் சார்ந்தது. இந்நூலில் எடுத்துரைக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு கட்டுரையும் நமது வீட்டின் அறைகளை எளிய முறையில் அலங்கரிக்க ஏராளமான வழிமுறைகளை எடுத்தியம்புகிறது. மேலும், தற்போது சந்தைக்கு வந்திருக்கும் புதுப்புது இன்டிரியர் தொழிற்நுட்பங்களையும், இன்டிரியர் பொருட்களின் அணிவகுப்பையும் நமக்கு அறிமுகப்படுத்துகிறது. நாமே அறிந்திராத பல்வேறு வகையான இன்டிரியர் வகைகளைப் பற்றி அடுக்கிக்கொண்டே போகும் இந்நூலில் வீட்டின் ஒவ்வொரு அறைகளுக்கும் திரைச்சீலையில் தொடங்கி கார்பெட், ஃபர்னிச்சர், லைடிங், வர்ணம், கார்டனிங் என நுணுக்கமாக விவரிக்கப்பட்டுள்ளது. இரசனைக்குரிய எண்ணங்களை உடையவர்கள்தான் தனது இல்லமும் இரசனைக்குரிய விrயமாக விளங்க வேண்டும் என விரும்புவர். ஒரு நாளில் மிகப்பெரும் பகுதியை ஒதுக்கும் இடமான நாம் வசிக்கும் வீடு அழகாக திகழ வேண்டும் என ஒவ்வொருவரும் நினைக்க வேண்டும். வீடுதான் நம் ஒவ்வொருவருக்கும் தினசரி அலுவல்களிலிருந்து மறுமலர்ச்சியை ஏற்படுத்துகிறது. தினமும் நம்மை அலங்கரிக்க நேரமும் ,பணமும் ஒதுக்குகிறோம். அதுபோன்ற வீட்டிற்கும் கொஞ்சம் நேரமும், கொஞ்சம் பணமும் ஒதுக்கினால் நமது வீடும் எழில் கொஞ்சம் வீடுதான்.