வீடு கட்ட வியத்தகு தொழிற் நுட்பங்கள்’ என்கிற இந்நூலின் ஆசிரியர் திரு. தாண்டவமூர்த்தி கட்டடத்துறைச் சேர்ந்த பொறியாளர்கள், மாணவரகள், ஆசிரியர்கள் ஆகியோரிடம் மிகவும் பிரபலமான எழுத்தாளர் ஆவார். கட்டவியலில் முதுநிலை பயின்று, ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற்றிருக்கும் திரு. தாண்டவமூர்த்தி கான்கிரீட் தொடர்பான ஆராய்ச்சிகளை தன் சொந்த முயற்சியில் பலகாலம் செய்து வருபவர். இளநீர் மட்டை, கரும்பு சக்கை, முட்டை ஓடு போன்றவைக் கொண்டு இவர் இதுவரை 18க்கும் மேற்பட்ட கான்கிரீட்டுகளைக் கண்டுபிடித்துள்ளார். நூல்களைப் பொறுத்த வரை ‘கட்டுமானத்துறை இன்றும் நாளையும்’, ‘எதிர்கால தொழிற் நுட்பங்கள்’, ‘கான்கிரீ ஏ டூ இசட்’ , ‘கட்டிட சீரமைப்பும் பழுதுபார்த்தலும்’ என்ற பல பயன்மிகு நூல்களை எழுதி இருக்கிறார். பொறியாளர் நிலையில் உள்ள வாசகர்களுக்கு மட்டுமல்லாது சாமானியர்களும் புரிந்து கொள்ள முடியும் அளவிற்கு இவரது மொழிநடை இருப்பது சிறப்பு. இந்நூலில் வீடு கட்டுவதற்கு பயன்படக்கூடிய தொழிற் நுட்பங்களான பாலிஸ்ட்ரின் தொழிற் நுட்பம், ஆர்,ஏ.எல்.சி பேனல்கள், ஏஏசி கற்கள், போரோதெர்ம் துளை கற்கள், அச்சு கான்கிரீட், பயோ ஓடுகள் , ஜிப்சம் பிளாஸ்டர், அக்ரிலிக், யுபிவிசி, எனப் பலவற்றை நமக்கு அறிமுகம் செய்கிறார். நவீன தொழிற்நுட்பத்தின் பலனாக விளைந்த புதுப்புது கட்டுமான முறைகள் , கட்டுமானப் பொருட்கள் ஆகியவற்றின் உற்பத்தி விவரத்தோடு அது எங்கே கிடைக்கிறது என்கிற தகவல்களையும் அவர் சொல்வது பெரும் பாராட்டுக்குரியது. மேலும், அவர் கூறும் ஜீரோ டிஸ் சார்ஜ் வீடுகளும், வட்டாரக் கட்டிடக் கலையின் ஒரு அம்சமான காபியன் சுவர்களும் வீடு கட்டுவோரை பெரிதும் கவரும். படித்து பயன் பெறுங்கள்