ஆன்மீகம் என்பது ஜோதிடம், பெயரியல், வழிபாடு, வாஸ்து, மனையடி சாஸ்திரம் போன்ற பலகூறுகளை உள்ளடக்கியது. ஆனால், இவற்றை நன்கு ஆராய்ந்து பார்த்தோம் எனில், இவை அனைத்துமே ஆன்மீகம் என்கிற போர்வைக்குள் மறைந்திருக்கும் விஞ்ஞான விஷயங்கள் தான். அதிலும் குறிப்பாக வாஸ்துவின் விதிகள் அனைத்துமே நமது ஆரோக்கியத்தையும், மனநிம்மதியையும் காக்கும் அறிவியலாகவே கருதப்பட்டு வருகிறது. வாஸ்து சாஸ்திரம் என்பது இன்றளவும் நூற்றுக்கு ஒருவர் மட்டுமே கடைபிடிக்கக் கூடியதாக இருந்து வருகிறது. இது பரவலாக எல்லோராலுமே கடைபிடிக்கக் கூடியதாக மாற வேண்டுமெனில் வாஸ்து ஒரு அறிவியல் என்கிற விஷயம் விளக்கப்பட வேண்டும். அதைத்தான் திருமதி. சந்திரா அவர்கள் இந்த நூலில் செய்திருக்கிறார். வாஸ்து சாஸ்திரம் பற்றிய மிகப்பெரிய ஞானத்தையும், அறிவையும் கொண்ட வாஸ்து பேரொளி திருமதி. சந்திரா வாசகர்களின் கேள்விக்கு பதிலளித்த விதத்தில் இருந்து ஆளுமை மிக்க எழுத்தாளராகவும் திகழ்கிறார். வாசகரின் பல்வேறு விதமான கேள்விகளுக்கு அறிவு பூர்வமாகவும், அறிவியல் பூர்வமாகவும் அவர் அளித்திருந்த பதில்கள் இன்று வளம் தரும் வாஸ்து என்கிற தொகுப்பாக உங்கள் கைகளில் தவழ்கிறது. வாஸ்துவினை உணர்வதோடு மட்டும் அல்லாமல் போலியான வாஸ்து பரிகாராங்களிலிருந்து விலகி நிற்கவும் இந்நூல் நிச்சயம் துணைபுரியும்.