‘நாமிருக்கும் நாடு நமதென்பறிந்தோம்’ என்ற பாரதியின் கூற்றினை மறந்து, நாமிருக்கும் நாட்டை நமது என்றறியாதவர்களை தீய்க்க, இந்நூல் சூட்டுக்கோல் ஏந்தி வருகிறது. நாமிருக்கும் நாட்டின் நிலையை தன்னாலியன்ற அளவுக்கு வெளிச்சம் போட்டு காட்டுகிறது. இந்நூலின் சாடுதலுக்கு அகப்படாத அரசியல் தலைவர்கள் மிகக்குறைவு. ஆளுங்கட்சி, எதிர்கட்சி, தேசிய கட்சி, மாநிலகட்சி என்கிற பேதங்கள் இல்லாமல் நெஞ்சுரத்துடன் எழுதப்பட்டிருக்கும் இந்நூல் கடந்த காலத்தின் கண்ணாடியும்,கல்வெட்டுமாகும் என்பது நிதர்சனம். இந்நூல் பிரதமரையும் கேள்வி கேட்கிறது, மாநிலத்தின் முதல்வரையும் கேள்வி கேட்கிறது, ஊடகங்களையும் வெளுத்துப் போடுகிறது, கடமை தவறுகிற காவல்துறையினரையும் சாடுகிறது. அவ்வப்போது மக்களையும் உலுக்குகிறது. குட்ட வேண்டியதை குட்டியும், பாரட்ட வேண்டியதை பாராட்டியும் மிகச்சரியான நேர்மை நேர்க்கோட்டில் எழுதியிருக்கும் இந்நூலின் ஆசிரியர் திரு.ஏ.உதயகுமார், கடந்த பத்து ஆண்டுகளில் பாரதம் கடந்து வந்த காலடிச்சுவடிகளை சுருக்கமாகவும், உருக்கமாகவும் நூல் நெடுக பதிவு செய்கிறார். இதுவரை கட்டிட இயல் குறித்த எத்தனையோ நூல்களை வெளியிட்டிருக்கிறது.ஆனால், நாடு மீது அக்கறை கொண்டோர்க்கான முதல் சமூக நூல் இது.