‘அஸ்திவாரம் அமைக்கும் போது’ என்ற இந்நூல் வீடு கட்டுபவர்கள் அனைவரின் கைகளிலும் இருக்க வேண்டிய இன்னும் ஒரு அற்புத நூல். பள்ளங்களை கணக்கிடுவது, ஆழத்தினை அளவிடுவது இதெல்லாம் பொறியாளர்கள் வேலை என்று மலைத்துவிட வேண்டாம். சாமானிய மக்கள் கூட அஸ்திவாரப் பணிகளின் அவசியத்தை, அது அமைக்கப்படும் விதத்தை அறிந்து கொள்ள வேண்டும் என்கிற உயர் நோக்குடன், இந்நூலை திரு.சுப.தனபாலன் அவர்கள் படைத்துள்ளார். ‘பல்துறை வல்லுநர்’ என அனைவராலும் அழைக்கப்படுகிற திரு. சுப.தனபாலன் அவர்கள், தொடாத, எழுதாத துறைகள் மிகச்சில. நாம் கேள்விப்பட்ட வரையில் பிரம்மாண்டமாக இருந்த பல்வேறு துறைகளை சுப.தனபாலன் அவர்கள் எளிமையாக்கி நம்மிடம் தந்திருக்கும் நூல்கள் ஏராளம். அந்த அற்புத நூல்களின் அணிவகுப்பில் இந்த நூலும் இடம் பிடித்திருக்கிறது. பள்ளம் தோண்டி கான்கிரீட்டை நிரப்பி, காலம் எழுப்புதல் வரையில் மட்டுமே நாம் அறிந்திருந்த அஸ்திவாரப்பணியை, சுப.தனபாலன் சொல்லியிருக்கும் விதம் நம்மை வியக்க வைக்கிறது. அதில் உள்ள சிறுசிறு பணிகள், தொழிற்நுட்ப விஷயங்கள் பலவற்றை அடுக்கிக்கொண்டே போகிறார். தொழில் ரீதியாக மட்டுமின்றி, பொது மக்களுக்கும், சிவில் துறை மாணவர்களுக்கும் பெருமளவில் பயன்படக்கூடிய இந்நூலை எழுதிய சுப.தனபாலன் அவர்களின் முயற்சி வெகுவாக பாரட்டப்பட வேண்டியதாகும்.