சிற்பங்கள் , மாடங்கள் போன்ற வேலைப்பாடுகள் உள்ளார்ந்த கட்டிடக்கலையில் தமிழர்கள் வல்லவர்கள். நுட்பத்திலும், வலிமையிலும் மிகச் சிறந்த கட்டுமானங்களை உருவாக்கியோர் நாம். என்றாலும், நவீன யுகத்தில் அவ்வப்போது கண்டுபிடிக்கப்பட்டுவரும் நவீன கட்டிடத் தொழிற்நுட்பம், புதுவகை கட்டிடப் பொருட்கள், படைப்புத்திறன் மிக்க வடிவமைப்புகள் போன்றவற்றை கட்டிடவியல் துறையில் புகுத்துவதில் ஏனோ நாம் பின் தங்கியிருக்கிறோம். நவீன காலத்து ஆர்க்கிடெக்சர்களை படைக்கும் உலகின் முதன்மையான 10 நாடுகள் கொண்ட பட்டியலில் நாம் இல்லை என்பது மிகவும் வருந்தத்தக்கது. பாரம்பரிய முறைகள் சிறந்தவைதான். அதற்காக அதிலிருந்து விடுபடாமல் இருப்பது எவ்விதத்திலும் முன்னேற்றத்திற்கு உதவி புரியாது. இந்த தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் 37 விதமான அயல்நாட்டு கட்டுமானங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் சிறப்பு மிக்கவை ஆகும். அவை குறித்த தகவல்கள் ஒவ்வொன்றையும் நாம் படிக்கும்போது அயல் நாட்டினர் எத்தனை தூரம் தொழிற்நுட்பத்திலும், கட்டிடக்கலையிலும் முன்னேறி இருக்கிறார்கள் என்பதை கண்கூடாக தெரிந்து கொள்ள முடிகிறது. நமது பொறியாளர்கள், ஆர்க்கிடெக்டுகள், கட்டிடப் பொறியியல் மாணவர்கள் மட்டுமின்றி, புதுமையான வடிவமைப்பில் தங்களது கனவு கட்டுமானங்களை உருவாக்க நினைக்கும் எல்லோருக்குமே இந்த நூல் பொதுவானது, பயன் மிக்கது.