வீடு கட்டலாம் வாங்க! என்ற இந்நூல் வீடு கட்டுபவர்கள் அனைவரின் கைகளிலும் இருக்க வேண்டிய ஓர் அற்புத நூல் வீட்டை எப்படியெல்லம் நேர்த்தியாக உருவாக்க வேண்டும் என்பதைச் செம்மொழியில் மிக அழகாக இந்நூலாசிரியர் விவரித்துள்ளார். வீடு கட்டுவதில் அடங்கியுள்ள பல்வேறு பொருட்களின் தரத்தை எப்படியெல்லாம் சோதிக்க வேண்டும். நல்லவற்றைத் தேர்வு செய்வதற்கு எப்படியெல்லாம் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்பனவற்றைத் தெளிவுப்படக் கூறும் இந்நூலை வீடு கட்டுவோர் படித்துப் பார்த்துப் பயனமைய வேண்டும் என்பது என் விருப்பம். வீடு, கட்டிடம் கட்டும் போது கட்டிடப் பொறியியல் வல்லுநர்கள் செயல்படுத்த வேண்டிய செயல்களை, நீங்களே இந்நூல் துணை கொண்டு செயல்படுத்திச் செம்மை பெறலாம். இந்நூலை அழகுதமிழில் வடித்திருக்கும் நூல் ஆசிரியர் சுப.தனபாலன் அவர்கள். கட்டுமானத்துறையினர் பலருக்கு அறிமுகமானவர். அவரது புத்தகங்கள் அனைத்தும் பிரசித்தி பெற்றவை. அவர் எழுதிய கட்டுமானத்துறை சார்ந்த பல நூல்களுள் இந்த நூலும் குறிப்பிடத்தக்க இடம் வகிக்கும். வீடு கட்டும் பணியில் சிறிது கூட முன் அனுபவம் இல்லாதவர்கள்தான் மிகவும் அதிகம். அப்படிப்பட்டவர்கள் வீட்டைக் கட்டும்போது எதிர்கொள்ளும் சிரமங்கள் அதிகம். ஏமாற்றப்படும் தருணங்களும் அதிகம். அவற்றைக் களைவதுதான் இந்நூலின் முதல் இலக்கு. உலகம் உள்ளளவு வீடுகள் கட்டுவது நடைபெறும். அதுபோல் உலகம் உள்ளவரை வாசகர்கள் இந்நூலை படித்துப் பயன் பெறுவார்கள்.