ஒரு வீடு கட்ட, உத்தேசமாக என்ன செலவாகும்? என்பதை நாங்களே கணக்கிட ஏதுவாக தமிழில் புத்தகம் இருக்கிறதா? எனவெகுகாலமாக கேட்டு வந்த மக்களுக்காகவே வெளியிடப்பட்டிருக்கிறது இந்த அரிய நூல். வீடு கட்ட என்ன செலவாகும்? என்கிற இந்நூலின் ஆசிரியர் திரு.சி.எச். கோபிநாத ராவ் அவர்கள் மூத்த பொறியாளர் ஆவார். கட்டடத்துறைத் தொடர்பான 45க்கும் மேற்பட்ட ஆங்கில நூல்களை எழுதியிருக்கும் இவர் முத்தான 5 கட்டட நூல்களை அழகு தமிழிலும் எழுதியிருக்கிறார். அதில், புது வீடு கட்டலாமா? என்கிற நூலில் அவர் சொல்லியிருக்கும் வீடு கட்டுவதற்கு தேவையான கட்டிடப்பொருட்களின் தேவை. கொள்ளளவு மற்றும் ஆட்களின் கூலி ஆகியவற்றை இன்னும் விரிவுப்படுத்தி தற்போதைய விலைப்பட்டியலை இணைத்து தனிநூலாக மலிவு விலையில் வெளியிட்ருக்கிறார். ஒரு வீட்டின் ஒவ்வொரு பகுதியும் எப்படி அமைய வேண்டும்? என்ன அளவு? அதற்கு தேவையான கட்டிடப்பொருட்கள் கொள்ளளவு என்ன? ஆட்கள் எத்தனைபேர் என்கிற வழிகாட்டலை இந்நூல் வழியே நீங்கள் ஐயமற அறிந்து கொள்ளலாம். இந்நூலில் சொல்லப்பட்டிருக்கும் வீட்டுக்கட்டுமான முக்கியப் புள்ளிக்கணக்குகள், அடிப்படை கட்டுமானப் பொருட்கள் மற்றும் எந்தெந்த வேலைக்கு எத்தனை ஆட்கள் தேவைப்படுவார்கள்? என்கிற விவரம், உத்தேசமாக அவர்களுக்கு என்ன சம்பளம் தரப்பட வேண்டும்? என்கிற தொகுப்பு போன்றவை வீடு கட்டும் பொதுமக்களுக்கு மட்டுமின்றி, சிவில் களத்தில் புதிதாக நுழையும் பொறியாளர்களுக்கும், மேற்பார்வையாளர்களுக்கும், மாணவர்களுக்கும் பெரும்பயனைத் தரக்கூடியதாகும்.