நீங்களும் பில்டர் ஆகலாம்’ என்னும் இந்நூலின் ஆசிரியர், கட்டுநர் திரு.ரூபி மனோகரன் அவர்கள் தென் சென்னை மக்களின் மத்தியில் வெகு பிரபலம். கட்டுமானத்துறையில் அவர் இதுவரை முடித்திருக்கும் புராஜெக்டுகள் சென்னையை தாண்டி சென்றதில்லை.ஆனால், இந்நூல் அவரை தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் கொண்டு சேர்க்கும். ஒரு கட்டுநருக்குள் ஒளிந்திருக்கும் எழுத்தாளரை கண்டு தமிழ்நாடு வியக்கும். கட்டுமானத்துறையில் ஏற்படும் பிரச்சனைகளையும், தீர்வுகளையும் சொல்லக்கூடிய தகுதி பெரும்பாலான கட்டுநர்களுக்கு உண்டு என்றாலும், அதை அனைவரும் படிக்கக் கூடிய வகையில் எளிய தமிழில் சொக்கும் நடையில் எழுதுவதற்கு சிலருக்கே இயலும். திரு.ரூபி மனோகரன் அவர்களுக்கு அது முடிந்திருக்கிறது. கட்டுமானத்துறையில் அவருக்கு இருக்கும் அனுபவம், அதை எழுத்து நடையில் சொல்வதற்கு அவருக்கு இருக்கும் முதிர்ச்சி ஆகிய இரண்டும் இணைந்து இந்நூலை ஆக்கி இருக்கிறது. கட்டுநர்கள் மட்டுமே வாசிக்கக் கூடியது என்கிற யாதொரு கட்டாயமும் இந்நூலுக்குக் கிடையாது. தனக்கெனச் சொந்தமாக வீடு கட்டும் ஒவ்வொரு தனி மனிதரும் இதை நிச்சயமாக வாசிக்க வேண்டும். மேலும், கட்டுமான நிறுவனங்களுக்கு மட்டுமல்லாது பல்வேறு துறை நிறுவனங்களும் கடைபிடிக்க வேண்டிய அடிப்படை கொள்கைகள், விதிகள் ஆகியவற்றை திரு. ரூபி மனோகரன் அவர்கள் தனது அனுபவம் வாயிலாக இங்கே வெளியிட்டிருக்கிறார். எனவே, இது கட்டுமானத்துறைக்கு மட்டுமானது என்கிற எல்லையை தாண்டி பல்வேறு தரப்பினருக்கும் பயனுள்ள தகவல்களைத் தரும் அமுதசுரபியாக நிச்சயம் திகழும்.