நிர்வாக மேலாண்மை குறித்த நூல்களுக்கு தமிழில் பஞ்சமில்லை. ஒரு பெரிய நிறுவனத்தில் 10 ஆண்டு காலம் பணி புரிந்தாலே தங்களுக்கு நிர்வாக மேலாண்மை அனைத்தும் அத்துப்படி என நினைத்துக் கொள்கிறார்கள். அதில் ஓரளவு எழுதக்கூடியவர்கள் உடனே புத்தகத்தை வெளியிட்டு விடுகிறார்கள். இவற்றில் பெரும்பாலானவை பிற மேலாண்மைப் புத்தகங்கள், மேலாண்மை தொடர்புடைய பாடப் புத்தகங்கள், இணையதள கட்டுரைகள் ஆகியவற்றிலிருந்து பெறப்பட்டவையாகவும், முழுமையற்றும் இருப்பதை நாம் கண்கூடாகக் காணலாம். ஆனால், திரு.பா.சுப்ரமண்யம் அவர்களின் 'நீங்களும் நிர்வாகமும்' என்ற இந்த நூல் இந்திய நிறுவனங்களுக்கு, குறிப்பாக தமிழகத்திலுள்ள பல்வேறு வகையான நிறுவனங்களுக்கும் மிகவும் ஏற்புடையவையாகும். நிர்வாக மேலாண்மை என்பது என்ன? அதை நாம் ஏன் கடைபிடிக்க வேண்டும்? மற்றும் மனிதவள மேலாண்மை, குழு மேலாண்மை, நேர மேலாண்மை, நிதி மேலாண்மை, அலுவலக மேலாண்மை, தகவல் தொடர்பு, ஒருங்கிணைத்தல், முடிவெடுத்தல், பிரச்சனைகளை எதிர்கொள்ளுதல் போன்ற முக்கிய மேலாண்மை கூறுகளை எளிமைப்படுத்தி, தக்க உதாரணங்களுடன் கூறி, விளக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தில் பணியாற்றும் மேலாளர்கள், செயலாளர்கள், அதிகாரிகள், மேற்பார்வையாளர்கள், தலைவர்கள் ஆகியோருக்கு மட்டுமின்றி, தொழில் முனைவோருக்கும் பெரிதும் பயன்படக்கூடிய இந்நூல் பல தரப்பினரிடையேயும் பாராட்டுகளைப் பெறும் என உறுதியாக நம்புகிறோம்.