வீட்டில் உள்ள பெண்கள் என்றாலே டியூசன் சொல்லித் தருவது, எம்பிராய்டரி போட்டுத் தருவது என்று தான் காலம் காலமாக நம்மை பழக்கி வைத்திருக்கிறார்கள். ஆண்களை விட பெண்களுக்குத் தான் பன்முகத் தன்மை அதிகம். ஒரே நேரத்தில் பல தொழில்களை செய்ய வல்லவர்களான நாம் ஏன் நமது தொழிற்பாதைகளை சிறு வட்டத்திற்குள்ளேயே குறுக்கிக் கொள்ள வேண்டும்? ஒரு பெண் துணிந்து தனது இல்லத்தில் ஒரு சுய தொழிலை துவங்குகிறார் என்றால் அவருக்கும் அவர் குடும்பத்தினருக்கும் மட்டுமல்ல, அவரைச் சுற்றி வீடுகளில் உள்ள பெண்களுக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கிறது. பெண்களுக்கு இல்லத்திலிருந்தபடியே செய்வதற்கு நூற்றுக்கணக்கான தொழில்கள் இருக்கின்றன. படித்தவர்கள், படிக்காதவர்கள், இளம் பெண்கள், பேரிளம் பெண்கள், முதியவர்கள் என ஒவ்வொருவருக்கும் ஏற்றத் தொழில் உண்டு. நமது பண வசதிக்கும் இட வசதிக்கும் ஏற்றத் தொழில்களை தேர்ந்தெடுத்து நாம் துவங்கலாம்.. மாதம் பத்தாயிரம் ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை பணம் புரட்டக்கூடிய தொழில்கள் நிறைய உள்ளன. அவற்றுள் 31 தொழில்களை மட்டும் தேர்ந்தெடுத்து அவற்றை இந்த புத்தகத்தில் உங்களுக்காக தொகுத்துத் தந்திருக்கிறேன்.