தாய்மை. பெண்களுக்கு இயற்கை தந்த வரம் தான் தாய்மை. ஒரு குழந்தையைப் பெற்றெடுப்பது என்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. ஏனெனில் கர்ப்பமாக இருக்கும் போது பெண்கள் பல பிரச்சனைகளை சந்திப்பார்கள். அந்த பிரச்சனைகளை வெற்றிகரமாக எதிர் கொண்டு, ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுத்தால், அது அவர்களுக்கு ஒரு மறு ஜென்மம். கருவில் உதித்த சிசுவை பத்து மாதங்கள் வயிற்றில் சுமந்து, உடலளவிலும் உள்ளத்து அளவிலும் பல மாற்றங் களை சந்தித்து, அதைப் பிரசவிக்கும்வரை அவள் எதிர்கொள்ளும் பிரச்னைகளும் ஏராளம்தான். சொல்லப் போனால், பிரசவம் என்பதே ஒரு பெண்ணுக்கு மறுஜென்மம் போன்றதுதான். ஆனாலும், தாய்மைப்பேறு என்பது பயப்பட வேண்டிய விஷயம் இல்லை. ஒவ்வொரு பெண்ணும் அனுபவித்து மகிழவேண்டிய அற்புதமான விஷயம்! பத்து மாதங்கள் பட்ட கஷ்டமெல்லாம் பிரசவித்த நொடியில், தனது குலக்கொடியை பார்த்தமாத்திரத்தில் பஞ்சாகப் பறந்துவிடுமே! கருத்தரித்த நாளில் இருந்து, பிரசவிக்கும் நாள் வரை இளம்தாய்களுக்கு தோன்றும் சந்தேகங்கள் ஏராளம். அம்மாவிடம், மாமியாரிடம், அண்டை அயலாரிடம் கேட்டுத் தெளிவுபெற்றாலும், விடை சிக்காத எத்தனையோ கேள்விகள் அவர்களின் உள்ளத்தை அரித்துக் கொண்டிருக்கும். அந்தக் கேள்விகள் அனைத்துக்கும் முழுமையான விளக்கங்கள் தருவதும், தாய்மைப் பேறு பற்றிய கட்டுக்கதைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதும்தான் நம் நோக்கம்.