கட்டுமானத்துறையைப் பொறுத்தவரை, சவாலாக நிற்பது நான்கு விஷயங்கள். ஒன்று திறமையான கட்டுமானத் தொழிலாளர்கள் பற்றாக்குறை, இரண்டு வீணாகும் நேரம். மூன்று சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத பசுமைக்கட்டிடம், நான்கு கட்டுமானங்களுக்காக சுரண்டப்படும் இயற்கை கனிம வளங்கள். இந்த நான்கையும் ஈடுகட்டக்கூடிய ஆய்வுகள் கட்டுமானத்துறையில் ஏராளமாக நடந்து வருகின்றன. கட்டுநர்களும், சிவில் பொறியாளர்களும் மற்றும் மாணவர்களும் இவை பற்றிய அறிவைப் பெற்றிருத்தல் மிகவும் அவசியமாகும். கட்டிடவியல், ஆய்வுக்கட்டுரைகளை எளிய தமிழில் படைப்பதற்கென்றே முனைவர் டி.எஸ். தாண்டவமூர்த்தி நமக்காக இருக்கிறார். தமிழ், ஆங்கிலம், இந்தி எனப் பன்மொழி புலமைப் பெற்றிருக்கும் திரு. டி.எஸ். தாண்டவமூர்த்தியின் மிகச்சிறந்த கட்டுமானத்துறை ஆய்வுக் கட்டுரைகள் தற்போது ‘கட்டுமானத்துறை இன்றும் நாளையும்’ என்கிற நூல் வடிவம் பெற்றிருக்கிறது. இந்நூலில் பசுமைக் கான்கிரீட், கட்டிடக்கழிவுகளின் மறுஉபயோகம், குறைந்த செலவில் கட்டுமானங்கள், கட்டுமானப் பணி பாதுகாப்பு என பல்வேறு பிரிவுகளில் பயனுள்ள ஆய்வுக் கட்டுரைகள் இடம்பெற்றிருக்கின்றன. இவை அனைத்துமே கட்டுமானத்துறை பெருமக்களுக்கு பெரிதும் பயன் அளிக்கக்கூடியவை என்பதில் எவ்வித ஐயமுமில்லை. கட்டுமானத் துறைக்கென்று தனித்தமிழில் நூல்கள் வெளிவருவதில்லை என்கிற குறையைப் போக்கும் வகையில் அவ்வப்போது அரிதான கட்டுமான நூல்களை வெளியிட்டு வரும் இந்த புதிய வெளியீடான ‘கட்டுமானத்துறை இன்றும், நாளையும்’ நூலினை படித்துப் பயனுற வேண்டுகிறோம்.